ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் நேற்று உத்தரவிட்டார்.
திருப்பூர்
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் நேற்று உத்தரவிட்டார்.
கொரோனா படுக்கைகள்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா படுக்கைகளும் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகர் பகுதிகளில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபம், சந்திரகாவி பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வு
இந்நிலையில் இந்த கொரோனா படுக்கைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்து நேற்று காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா சிக்கண்ணா கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட நர்சுகள் மற்றும் டாக்டர்களிடம் அரசு வழிமுறைகளுடன் எந்த ஒரு தொய்வும் இன்றி தரமாக சிகிச்சை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். குமரன் கல்லூரியையும், காய்ச்சல் பரிசோதனை முகாம்களையும் அவர் ஆய்வு செய்தார்.
மேலும், கொரோனா படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் படுக்கைகளும் இருக்க வேண்டும். ஆக்சிஜனும் தட்டுப்பாடின்றி கொரோனா நோயாளிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவ் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.