அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்படும்
கொரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதி செய்யப்பட்டு படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
திருவண்ணாமலை
கொரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதி செய்யப்பட்டு படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
பூ மார்க்கெட்
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொேரானா தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் கடந்த 10-ந் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை நகரப் பகுதி முழு ஊரடங்கு உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு தற்காலிக பூ மார்க்கெட்டை அவர் ஆய்வு செய்தார். அப்போது பூ வியாபாரிகளிடம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து திருவண்ணாமலையில் சட்டநாதன் தெரு, வேங்கிக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட காய்ச்சல் சிறப்பு முகாம்களையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
படுக்கை வசதிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிகம் கூடாத வகையிலும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பல்வேறு இடங்களில் பிரித்து தற்காலிக மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் மூலம் முக கவசம் அணிவதை கண்காணிப்பது, ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்பது போன்றவை தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதன் மூலம் ஒரு நாளுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதி செய்யப்பட்டு படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆயுஷ் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கிட் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை
சமீபத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து உயிரிழந்த ஒருவரின் உடல் ஆம்புன்ஸ் கிடைக்காததால் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, மருத்துவமனைகளில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு தனி ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளது. தற்போது அதிக தேவைகள் இருப்பதால் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு ரெட் கிராஸ் மூலம் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.