சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் அளவீடு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் அளவீடு செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தான் அறக்கட்டளை கோவில்களுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புடைய 2 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.இந்த சொத்துகளை அபகரிக்க 20-க்கும் மேற்பட்ட குழுவினர் முயற்சி செய்தாக தெரிகிறது. சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கோவில் சொத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் முதல் கட்டமாக மாமல்லபுரம் ஆளவந்தான் கோவில் சொத்துகள் அளவீடு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணகப்பட்டு, சந்து தெரு, வேம்படி விநாயகர் கோவில் தெரு, சவுபாக்கியா நகர் தனியார் குடியிருப்பு அருகில் உள்ள இடங்கள், மலைக்கோவில், நெம்மேலி செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 512 ஏக்கர் கோவில் சொத்துகள் உள்ளது. இந்த சொத்துகளில் கட்டிடங்களாக 26 ஆயிரத்து 476 சதுர அடி நிலப்பரப்பில் 34 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.வணிக வளாகங்கள் 82 ஆயிரத்து 496 சதுர அடி நிலப்பரப்பில் 50 பேர் பயன்படுத்தி வருவதாகவும், மனை வாடகை 2 லட்சத்து 52 ஆயிரத்து 308 சதுர அடி நிலப்பரப்பில் 160 பேர் பயன்படுத்தி வருவதாக கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.இந்த நிலையில் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 512 ஏக்கர் சொத்துகளில் 100 ஏக்கருக்கு மேல் கோவில் நிலங்களை மர்ம நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவில் நிலம் அளவீடு
இந்த நிலையில் முதல் கட்டமாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளப்பதற்கு நேற்று வருவாய்த்துறையினர், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., திருப்போரூர் தாசில்தார், துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் திருப்போரூர் முருகன் கோவில் செயலாளர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் முன்னிலையில் அளவீடு செய்தனர்.முதல் கட்டமாக முருகன் கோவிலில் இருந்து நெம்மேலி செல்லும் சாலை அமைந்துள்ள தனியார் பள்ளி மற்றும் வயல் நிலங்கள் அடங்கிய சர்வே எண் 123, 126, 127, 128, 137 உள்ளிட்ட நிலங்களை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர்.