மழையால் நெற்பயிர்கள் சேதம்
தளவாய்புரம் அருகே மழையால் நெற்பயிர்கள் சேதமானது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே புத்தூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டுள்ளனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:- புத்தூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மழையினால் சாய்ந்து சேதமானது. இங்குள்ள பெரிய சாலியர் குளம் கண்மாய் பகுதியில் இருந்து பாசனத்துக்கு நீர் வருகிறது. கடந்த ஆண்டு நெல் மூடை ரூ. 1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த மழையால் சேதம் அடைந்திருப்பதால் இதனை வியாபாரிகள் மூடை ரூ.1,000-க்கு கேட்கின்றனர். எந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3,000 கூலி கேட்கின்றனர். ஒரு ஏக்கர் அறுவடை செய்ய சுமார் 2 மணி நேரம் ஆகிறது. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.