சேலத்தில் 1,647 பேருக்கு சிகிச்சை: 59 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு மாநகராட்சி ஆணையாளர் தகவல்
சேலத்தில் 1,647 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், 59 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலத்தில் 1,647 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், 59 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1,647 பேருக்கு சிகிச்சை
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் நேற்று 73 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம் மூலம் 4 ஆயிரத்து 736 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 1,631 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் வரை சேலம் மாநகராட்சியில் 52 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று ஒரு தெருவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 1,647 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக மேலும் 8 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது 40-வது வார்டு அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனி, 2-வது வார்டு ஜாகீர் அம்மாபாளையம் 2-வது சன்னதி தெரு, 29-வது வார்டு செவ்வாய்பேட்டை வைத்தி தெரு மற்றும் தொட்டு சந்திராயன் தெரு, 55-வது வார்டு சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு, 54 வது வார்டு சீரங்கன் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு, 38-வது வார்டு அம்மாபேட்டை புது தெரு என மொத்தம் நேற்று மட்டும் கூடுதலாக 8 வார்டுகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது தெரியவந்தது.
59 இடங்கள்
இதையடுத்து சேலம் மாநகராட்சியில் மொத்தம் 59 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.