சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 2 பேர் பலி

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-05-12 20:46 GMT
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 2 பேர் பலியானார்கள்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் உள்ள 800 படுக்கைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் பலர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்க இடம் இல்லாததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்சில் இறந்தனர்
இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயதுடைய பெண்ணும், 45 வயதுடைய ஆண் ஒருவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் இடம் இல்லாததால் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளான அவர்கள் திடீரென ஆம்புலன்சிலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சேலம் மாநகரை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் வந்தார். ஆனால் அவரும் அங்கு திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்