ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணத்தொகைக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நிறைவு 15-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு

கொரோனா நிவாரணத்தொகையான ரூ.2 ஆயிரம் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. 15-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-12 20:21 GMT
சேலம்:
கொரோனா நிவாரணத்தொகையான ரூ.2 ஆயிரம் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. 15-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர்
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரண தொகை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அதில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
கொரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தினமும் 200 பேருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் 1,571 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 250 அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 
நிறைவடைந்தது
சேலத்தில் நேற்று 3-வது நாளாக பல்வேறு இடங்களில் வீடு, வீடாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்றது. வருகிற 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படுவதால் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. 
ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை டோக்கன் கிடைக்க பெறாதவர்கள் அவரவர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் வாங்கிய குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் மட்டும் ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத்தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்