மொரப்பூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரின் மனைவி அடித்துக்கொலை
மொரப்பூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரின் மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரின் மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓய்வுபெற்ற ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ராணமூக்கனூரை அடுத்த வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 70). இவர் வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சிவகாமியின் மகன் சிவசங்கரன் கடத்தூரில் பெட்டிக்கடை வைத்து அங்கேயே தங்கி வந்துள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று அறிகுறி தென்படவே வீரராகவபுரத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டார். இவருக்கு, இவருடைய தாயார் சிவகாமி தினமும் உணவு கொடுத்து வந்துள்ளார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று காலை சிவகாமி தனது மகனுக்கு உணவு கொண்டு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிவசங்கரன் தனது தாயாரின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். அங்கு வீட்டின் வாசலை ஒட்டி வீட்டுக்குள் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிவகாமி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், மர்ம நபர்களால் தாயார் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து கம்பைநல்லூரில் வசிக்கும் தனது அக்காள் தேவிக்கு (50) தகவல் கொடுத்தார். அவரும் அங்கு விரைந்து வந்தார். ரத்த வெள்ளத்தில் தாயார் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக மொரப்பூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். மேலும் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சன் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அங்கிருந்தவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிவகாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மூதாட்டி அணிந்திருந்த நகையை, கொலையாளிகள் எடுத்து செல்லாமல் இருப்பதால் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவகாமியை பணத்திற்காக யாராவது கொலை செய்தார்களா? அல்லது வேறு காரணத்திற்காக கொலை செய்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.