சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடின
3-வது நாளாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கிணத்துக்கடவு
3-வது நாளாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று 3-வது நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதியம் 12 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன. இதைத்தவிர மருந்துக்கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.
சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக மதியம் 12 மணிக்கு பிறகு கோவை -பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ்.ரோடு, கிணத்துக்கடவு மேம்பாலம், பொள்ளாச்சி நகரில் முக்கிய சாலைகள், பொள்ளாச்சி-வால்பாறை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் மாலை, இரவு நேரங்களில் தேவையில்லாமல் வாகனங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். அத்தியாவசிய தேவைகளுக்காக வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக-கேரள எல்லையான வீரப்ப கவுண்டனூர் போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார், வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக கேரளாவில் இருந்து இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களை மட்டும் தமிழகத்திற்குள் அனுமதித்தனர். மற்ற வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
போலீசார் தீவிர கண்காணிப்பு
அதேபோல் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கிணத்துக்கடவு தாமரைக்குளம், கோவில்பாளையம் ஆகிய பகுதியில் ரோந்து சென்று, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.