நேர்முக உதவியாளரை தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா அதிகாரிகள் கலக்கம்
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கடலூர்,
தடுப்பு பணி
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளொன்றுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கவும், தடுப்பு பணியில் ஈடுபடவும் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று முன்தினம் என்.எல்.சி. அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பரிசோதனை
அதன்பிறகு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு மையங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பிறகு அவருக்கு சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றுவிட்டார்.
தொடர்ந்து அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.
கொரோனா
இந்நிலையில் நேற்று காலை அவருக்கு பரிசோதனை முடிவு தெரிவிக்கப்பட்டது. அதில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கலெக்டர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்ததும் அவருடன் அலுவலக பணியிலும், கொரோனா தடுப்பு பணியிலும் ஈடுபட்ட அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தனக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யாவை தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்துமாறு தெரிவித்தார்.
உதவியாளருக்கு தொற்று
இதற்கிடையே கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருக்கும் பரிமளம் என்பவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து தற்போது கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.
கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் கடந்த 20 நாட்களுக்கு முன்பு போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் தங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் அதிகாரிகள் ஒரு கலக்கத்துடனே இருந்து வருகிறார்.