தேனியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்

தேனியில் பணியிட மாற்றத்தை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-12 16:38 GMT
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், பொருளாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
தேனி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு வருவாய் ஆய்வாளர்கள் 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணியிட மாற்றம் செய்ததில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், முறையான கலந்தாய்வு செய்யாமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து, ஏற்கனவே வழங்கிய பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, முறையாக கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என்றும், கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலக வருவாய் ஆய்வாளர் பணியிடத்துக்கு நேரடி நியமன அலுவலர்களை மட்டுமே நியமிப்பதை கைவிட்டு பதவி உயர்வில் வருபவர்களையும் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 
இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்