என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி தொடருமா? காங்கிரஸ் சந்தேகம்
புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
புதுவை,
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பின்னர் ஒரு அமைச்சரவை இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு புதுவை சட்டமன்றத்துக்கு அவசர அவசரமாக, தன்னிச்சையாக தன் கட்சிக்காரர்களை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையாகும். முதல்-அமைச்சரின் எண்ணத்துக்கு புறம்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியைக்கூட கொடுக்காமல் பா.ஜ.க. மட்டுமே எடுத்துக் கொண்டது பா.ஜ.க.வின் சுயரூபத்தை காட்டுகிறது. கூடா நட்பு கேடாய் விளையும் என்ற பழமொழியின்படி இக்கூட்டணி கூடிய விரைவில் புதுச்சேரி அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெரும் பணத்தோடு அதிகார துஷ்பிரயோகத்தை உபயோகப்படுத்தி ஆசை வார்த்தையையும், பயமுறுத்துதலையும் கொண்டு எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சிகளை கவிழ்க்கின்ற கட்சி பா.ஜ.க. புதிதாக ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் தொடருமா? அல்லது பா.ஜ.க.வின் தலைமைக்கு மாற்றப்பட்டு விடுமா? என்ற சந்தேகம் இப்போது உண்மையாகி விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.