ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க ரூ.12 ஆயிரம் தானமாக வழங்கலாம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க ரூ.12 ஆயிரம் பொதுமக்கள் தானமாக வழங்கலாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-05-12 14:50 GMT
புதுச்சேரி, 

புதுவை இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், 10 ஆயிரம் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பொட்டலங்களை காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மருந்து பொட்டலங்களை போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிறிஸ்னியாவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் டாக்டர் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் சோதனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது 12 மணிவரை மட்டுமே அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கதவினை திறந்தாலே தொற்றிக்கொள்ள வாசலிலேயே கொரோனா காத்திருக்கிறது. வெளியில் தேவையின்றி சுற்றிதிரிபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரி மற்றும் ஏனாம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. ஏழை மக்கள் பயன்பெற பாண்லே பாலகங்கள் மூலம் ரூ.5-க்கு உணவு 40 பாலகங்களில் வழங்கப்படுகிறது.

நாளைய தினம் (இன்று) சர்வதேச செவிலியர்கள் தினமாகும். இதையொட்டி செவிலியர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்க உள்ளோம். கொரோனா சிகிச்சைக்காக டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஜிப்மருக்கு 40 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது.

மக்களின் பங்களிப்பும் இதில் அவசியமாகிறது. ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க ரூ.12 ஆயிரம் தானமாக பொதுமக்கள் வழங்கலாம்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி திருவிழாவை அதிகப்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து புதுவை எல்லைக்குள் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கட்டுப்பாடு மண்டலங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களை சிறியதாக பிரித்து சமுதாய பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் புதுவையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்