சொட்டுநீர் பாசன கருவிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
நீலகிரி விவசாயிகள் சொட்டுநீர் பாசன கருவிகள் அமைக்க மானியம் பெற விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரி விவசாயிகள் சொட்டுநீர் பாசன கருவிகள் அமைக்க மானியம் பெற விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சொட்டுநீர் பாசன திட்டம்
நீலகிரியில் தோட்டக்கலைத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி சொட்டுநீர் பாசன திட்டம் முதன்மையான திட்டமாகும்.
நீராதாரம், மழைப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி சொட்டுநீர் பாசன முறையை அமைப்பதற்கு முன் வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன கருவிகள் 100 சதவீத மானியம், பெறுவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
முன் வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியம் மட்டுமல்லாது, கீழ்க்கண்ட துணைநிலை நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க் கிணறு, துளை கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், டீசல் பம்பு செட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு 50 சதவீத மானியம் ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் குழாய் அமைப்பதற்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும்,பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்க தொட்டி நிறுவ ஒரு கன மீட்டருக்கு ரூ.350, நிதிஉதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்பு கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படும்.
கணினி சிட்டா
பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம் ஆகியவற்றின் நகல்கள், சிறு, குறு விவசாயி சான்று, உழவன் செயலியில் பதிவு செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.