செங்கோட்டை பஸ்நிலையத்தில் தற்காலிக வாரச்சந்தை திறப்பு

செங்கோட்டை பஸ்நிலையத்தில் தற்காலிக வாரச்சந்தை திறக்கப்பட்டது.

Update: 2021-05-11 23:19 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் நகராட்சி சார்பில் வாரச்சந்தை அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள இடத்தில் இயங்கி வருகிறது. இங்கு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கனி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் கட்ட தொற்று அதிகரிப்பதை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதையொட்டி வழக்கமாக இயங்கி வரும் வாரச்சந்தையில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவுறுத்தலின் பேரில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதன்படி செங்கோட்டை நகராட்சி  பஸ்நிலையத்தில் தற்காலிக வாரச்சந்தை நேற்று தொடங்கப்பட்டது. இந்த சந்தை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை போலீஸ் பாதுகாப்புடன் அரசு விதிகளுக்குட்பட்டு நடந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

இதையொட்டி தாசில்தார் ரோஷன் பேகம், நகராட்சி ஆணையாளர் நித்தியா, சுகாதார அலுவலர் வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ஜாஸ்மின் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். இதேபோல் வழக்கமாக அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள இடத்திலும் நகராட்சி வாரச்சந்தை நடைபெற்றது.

மேலும் செய்திகள்