மதுபாட்டில்கள் திருட்டை தடுக்க டாஸ்மாக் கடைகளில் இரும்பு கம்பிகள் பொருத்தும் பணி தீவிரம்
மதுபாட்டில்கள் திருட்டை தடுக்க டாஸ்மாக் கடைகளில் இரும்பு கம்பிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சேலம்:
கொரோனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாநகரில் உள்ள 60 கடைகள் உள்பட மாவட்டத்தில் உள்ள மொத்தம் 220 டாஸ்மாக் கடைகளும் 9-ந் தேதி மாலை 6 மணியுடன் மூடப்பட்டன. இந்த நிலையில் ஒரு சில கடைகளில் ஊழியர்களே திறந்து மதுபாட்டில்களை எடுப்பதாக புகார்கள் வந்தன. அதேபோன்று சில கடைகளில் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைெயாட்டி மதுபாட்டில்கள் திருட்டு போவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பூட்டப்பட்டு உள்ள கதவின் மேல் உறுதிப்படுத்தும் விதமாக இரும்பு கம்பிகளை பொருத்தி யாரும் உடைக்க முடியாத அளவில் அதன்மேல் வெல்டிங் வைத்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி சேலம் முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் தொழிலாளர்கள் மூலம் ஏற்கனவே உள்ள கதவின் முன் புறத்தில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு போகும் சம்பவம் நடைபெற்றது. இதை தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே போடப்பட்டு உள்ள கதவின் மேல் இரும்பு கம்பிகள் பொருத்தி வெல்டிங் வைத்து உள்ளோம். இந்த இரும்பு கம்பியை யாராலும் அவ்வளவு சுலபமாக உடைத்து விட முடியாது. இதன் மூலம் மதுபாட்டில்கள் திருட்டு போவது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.