ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக திருச்சியில் 3-வது நாளாக குவிந்த பொதுமக்கள்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக திருச்சியில் 3-வது நாளாக பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-05-11 21:18 GMT
திருச்சி, 
கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக திருச்சியில் 3-வது நாளாக பொதுமக்கள் குவிந்தனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய 5 இடங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.

மக்கள் குவிந்தனர்

இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லூரியில் இந்த மருந்து வினியோகம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. 

இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்றும் இந்த கல்லூரியில் மருந்து வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் முந்தைய நாள் இரவு மற்றும் அதிகாலை நேரத்திலேயே வந்து வரிசையில் காத்து நின்றனர். நேற்று காலை 10 மணி அளவில் அவர்களில் முதலில் வந்து நின்ற 50 பேர் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

அவர்கள் கொண்டுவந்த ஆவணங்கள், டாக்டரின் பரிந்துரை சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் அடிப்படையில் 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது. ஆனால் வெளியில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பல மணி நேரமாக காத்து நின்றனர்.

அவர்களில் சிலர் “தங்களது உறவினர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாத்திரை வழங்குவதற்கு உள்ளே செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?” என கண்ணீர் மல்க புலம்பினார்கள். அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்காததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிகாரிகள் சமரசம்

இந்த நிலையில் திருச்சி ஆர்.டி.ஓ. விசுவநாதன், திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் மருந்து வழங்க உறுதியளிக்கப்பட்டது. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் செய்திகள்