வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே உள்ள மேல உப்பூரணி சர்ச் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாபிள்ளை (வயது 42). மரம் வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளியான இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அய்யாபிள்ளை நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாபிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாப்பாக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் (52), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சொர்ணலதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சங்கரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சங்கரன் விஷம் குடித்து மயங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் விரைந்து வந்து சங்கரனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.