கொரோனா பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள்

அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளர் பற்றாக்குறை காரணமாக கொரோனா பரிசோதனைக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

Update: 2021-05-11 20:12 GMT
ஜெயங்கொண்டம்:

கொரோனா பரிசோதனை
கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக வருபவர்களால் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 220 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய அளவில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததன் காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொற்று எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் நகராட்சித்துறையினர் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்வதற்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கும் மக்கள் கூடுகின்றனர்.
காத்திருக்கும் நிலை
இந்நிலையில் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளர் பற்றாக்குறை காரணமாக கொரோனா பரிசோதனை செய்வதற்கு, பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அவர்களில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் மற்றும் பாதிக்காதவர்கள் யார் என்பது தெரியாது. பரிசோதனை முடிவில்தான் அது தெரியவரும். 
இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் வரும் நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் கூடுவதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடிவதில்லை. இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் உள்ளது.
எனவே ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக ஆய்வக உதவியாளர்களை நியமிக்கவோ அல்லது தற்காலிகமாக பணியமர்த்தவோ சுகாதாரத்துறை முன்வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்