அதிராம்பட்டினத்தில் சம்பா நண்டு ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை
அதிராம்பட்டினத்தில் சம்பா நண்டு ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது.
அதிராம்பட்டினம்:-
அதிராம்பட்டினத்தில் சம்பா நண்டு ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது.
நாட்டுப்படகு மீனவர்கள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
தற்போது மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளதால் விசைப்படகுகள் தவிர்த்து நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் கட்டுமர மீனவர்கள் மட்டும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கடலில் அதிவேக சூறைக்காற்று வீசியது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நேரக்கட்டுப்பாடு
காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளதால் கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மீன் மார்க்கெட் திறந்திருக்க மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரக்கட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடலில் இருந்து குறைந்த அளவு மீன்களை பிடித்து விட்டு அவசரஅவசரமாக கரை திரும்பி வருகின்றனர்.
சம்பா நண்டு
நேற்று அதிராம்பட்டினம் கடல் பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியிலும் பெரிய அளவுடைய சம்பா நண்டுகள் சிக்கின. இந்த நண்டுகள் விற்பனைக்காக அதிராம்பட்டினம மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் ஒரு சம்பா நண்டு அரை கிலோ முதல் 3 கிலோ வரை எடை இருந்தது. மீன்பிடி தடைகாலத்துக்கு முன்பு ஒரு கிலோ சம்பா நண்டு ரூ.850-க்கு விலை போனது. தற்போது தடை காலம் என்பதால் சம்பா நண்டு விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனையாகிறது. மீனவர்கள் பிடித்துவரும் உயிர் நண்டுகளை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து உயர்தர ஓட்டலுக்கு அனுப்பி வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத நிலையில் மீன்வரத்து குறைந்து இருப்பதால் மீன்விலை உயர்ந்து காணப்படுகிறது.