தீக்குளித்து பெண் தற்கொலை; விவசாயி கைது
கொள்ளிடம் அருகே தீ்க்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார், விவசாயியை கைது செய்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே தீ்க்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார், விவசாயியை கைது செய்துள்ளனர்.
பெண் தீக்குளிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த மணி மகள் மாலா (வயது 48). திருமணமாகாத இவர், பழையபாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இதே பழையபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி பவுன்ராஜ் (63) என்பவர் மாலாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்து கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக அந்த நிலத்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நிலத்தை மாலா பலமுறை கேட்டும், அவர் கொடுக்காமல், அந்த நிலத்திற்கு அவரை செல்லவிடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மாலா நேற்று முன்தினம் விவசாயி பவுன்ராஜ் வீட்டு முன்பு நின்று மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
பெண் சாவு- விவசாயி கைது
படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாலா நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி பவுன்ராஜை கைது செய்தனர்.