4 தனியார் நிதி நிறுவனங்களுக்கு ‘சீல்’
மன்னார்குடியில் தடையை மீறி செயல்பட்ட 4 தனியார் நிதி நிறுவனங்களுக்கு தாசில்தார் பூட்டி ‘சீல்’ வைத்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் தடையை மீறி செயல்பட்ட 4 தனியார் நிதி நிறுவனங்களுக்கு தாசில்தார் பூட்டி ‘சீல்’ வைத்தார்.
தாசில்தார் ஆய்வு
கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க நேற்று முன்தினம் முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளுக்கு மட்டுமே மதியம் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தடைவிதிக்கப்பட்ட கடைகளை திறந்தால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தாசில்தார் தெய்வநாயகி தலைமையில் அதிகாரிகள் நேற்று மன்னார்குடி கடைவீதியில் ஆய்வு செய்தனர்.
நிதி நிறுவனங்களுக்கு ‘சீல்’
இந்த ஆய்வின் போது மன்னார்குடி மேல ராஜ வீதி, கடைத்தெரு உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி 4 தனியார் நிதி நிறுவனங்கள் செயல்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 4 நிதி நிறுவனங்களுக்கு தாசில்தார் தெய்வநாயகி முன்னிலையில் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
மேலும் இது குறித்து தாசில்தார் கூறும்போது:-
அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர வேறு நிறுவனங்கள் திறந்திருந்தால் அபராதம் மற்றும் பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.