கொரோனா பரவலை தடுக்க காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்த வேண்டும்
கொரோனா பரவலை தடுக்க காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
பொள்ளாச்சி
கொரோனா பரவலை தடுக்க காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடரங்கு இன்னும் 13 நாட்கள் தான் உள்ளது. அதற்குள் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் கண்டிப்பாக டாக்டர் பணியில் இருக்க வேண்டும். சித்த மருத்துவர்கள் மூலம் கபசுர குடிநீர் வழங்க வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள படுக்கைகள் குறித்த விவரத்தை தினமும் மாலை 3 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 2 முறை கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும். இந்த பணிகளை கண்காணிக்க தனியாக அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். வெளிநோயாளிகள் பிரிவிற்கு தேவையில்லாமல் மற்றவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். வார்டுகளில் நோயாளிகளுடன் உதவியாளர்களை தங்கி இருக்க அனுமதிக்க கூடாது.
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விடுதியில் டாக்டர்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிதல்,
சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஊடரங்கு அமலில் உள்ளதால் கடைகள் பகல் 12 மணிக்குள் அடைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார், விவேகானந்தன், தாசில்தார்கள் அரசகுமார், விஜயகுமார், ராஜா, சசிரேகா, நகர்நல அலுவலர் ராம்குமார், தெற்கு ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.