பெண்ணாடம் அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் பலி

பெண்ணாடம் அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-05-11 17:27 GMT
பெண்ணாடம், 


பெண்ணாடம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் பாலகுமார் (வயது 21). கூலி தொழிலாளியான இவர் கிளிமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். 

பாலகுமார் நேற்று அதிகாலை அதேஊரில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பாலகுமாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரத்த காயங்கள்

இதைகேட்டு பதறிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பாலகுமாரின் உடலை பார்வையிட்டு கதறி அழுததோடு, அவருடைய உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது பாலகுமாரின் கால்களில் ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுபற்றி கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 


அதன்பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி. மோகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பாலகுமாரின் உடலையும், அவர் பிணமாக கிடந்த இடத்தை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மின் வேலியில் சிக்கி பலி

விசாரணையில், பாலகுமார் நேற்று அதிகாலை அருகே உள்ள வயலுக்கு சென்று இயற்கை உபாதை கழித்து விட்டு கை, கால்களை கழுவுவதற்காக அதேபகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான பம்பு செட்டுக்கு சென்றபோது, வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தது. 

மேலும் விளைநிலத்தில் மின்வேலி அமைத்த நபர்கள் அதிகாலையிலேயே, அந்த மின்வேலியை அகற்றிச் சென்றிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 


இதையடுத்து பாலகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சாவுக்கு காரணமான மின்வேலியை அமைத்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்