ரூ.3½ கோடி செலவில் போடி உள்பட 4 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி
தேனி மாவட்டத்தில் போடி உள்பட 4 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டத்தில் போடி உள்பட 4 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தேவை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் சில இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இந்த தட்டுப்பாடு நிலவியது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. அதில் இருந்து 340 படுக்கைகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது.
உற்பத்தி கூடம்
இந்தநிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளதால், மத்திய சுகாதார திட்டத்தின் கீழ் போடி, கம்பம், பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.3 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி போடியில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தொடங்கி உள்ளது. மற்ற 3 இடங்களிலும் தலா ரூ.80 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.