தர்மபுரி மாவட்டத்தில் 193 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 193 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,610 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 140 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,662 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.