அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதும் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்

விழுப்புரத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-11 15:17 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. காய்கறி, மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், பழக்கடைகள், டீக்கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஓட்டல்கள் முழு நேரமும் செயல்பட்டு வந்தாலும் அங்கு பார்சல் சேவை மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் விழுப்புரம் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதா? என்று கேட்கும் அளவிற்கு நகர பகுதியில் மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்று வருகின்றனர். 

மக்கள் கூட்டம் 

குறிப்பாக விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, நேருஜி சாலைகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் 12 மணியுடன் கடைகள் மூடப்படும் என்பதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது எந்தளவிற்கு மக்கள் கூட்டம் இருக்குமோ அதைப்போலவே நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இவர்கள் கொரோனாவின் கோரதாண்டவத்தை மறந்து சமூக விலகலை கடைபிடிப்பது என்ற பேச்சுக்கே இடமளிக்காமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். இவர்களில் சிலர் முக கவசமும் அணிவதில்லை. இவ்வாறு அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காமல் அதனை காற்றில் பறக்க விட்டு விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

சமூக தொற்று பரவும் அபாயம்

மேலும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், தொடர்ந்து பொதுமக்களை கட்டுப்படுத்தினாலும், அபராதம் விதித்தாலும், எச்சரிக்கை செய்து அனுப்பினாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மீண்டும் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏதேனும் ஒன்றை வாங்கச்செல்கிறோம் என்று கூறிக்கொண்டு தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் வலம் வருகின்றனர். இவ்வாறு தேவையில்லாமல் சுற்றுவதால் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி, நாளுக்கு நாள் நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்தில் வாரத்தில் ஒரு நாள் ஒரு நபர் மட்டுமே வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லும் முறை அமலில் இருந்தது. அந்த சமயத்தில் மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தாததாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் மக்கள் திரண்டு வருவதால் சமூக தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். அரசு தெரிவிப்பதுபோல் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த முடியும். எனவே வாரத்திற்கு ஒருமுறை ஒரு நபர் மட்டுமே வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பயன்பாடு முடிந்த பிறகே மீண்டும் தேவைக்கேற்ப வெளியில் வந்தால் தொற்றுநோய் பரவல் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும். இதை உணர்ந்து மக்கள் செயல்பட்டால்தான், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் முற்றிலும் தடுக்க முடியும்.

மேலும் செய்திகள்