உழவர் சந்தை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; விவசாயிகள் திடீர் போராட்டம்

ஊட்டியில் உழவர் சந்தை இடமாற்றத்தை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2021-05-11 01:17 GMT
ஊட்டி,

ஊட்டியில் உழவர் சந்தை இடமாற்றத்தை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விவசாயிகள் எதிர்ப்பு

நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ஊட்டி சேரிங்கிராசில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 85 கடைகளில் காய்கறிகள், பழங்களை வாங்க பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். 

சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தது. இதை கருத்தில் கொண்டு உழவர் சந்தையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஏ.டி.சி.யில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்துக்கு இடமாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை அந்த மைதானத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனால் உழவர் சந்தையை என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு கடைகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை உழவர் சந்தையில் கடைகளை திறக்க விவசாயிகள் வந்தனர். அப்போது வேளாண் அதிகாரிகள் கடைகளை வாகன நிறுத்துமிடத்துக்கு மாற்றும்படி கூறினர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர் கூறுகையில், திறந்தவெளியில் கடைகள் அமைப்பதால் மழை பெய்தால் காய்கறிகள், பழங்கள் நனைந்து வீணாக போகும். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும். மேலும் அங்கு காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து சென்றால் சேதம் அடையும் அபாயம் உள்ளது. தற்காலிகமாக 
கூடாரம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் இங்கேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றனர். 

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதை ஏற்று விவசாயிகள் கடைகளை வாகன நிறுத்துமிடத்துக்கு மாற்றி அமைத்தனர். 

போராட்டத்தால் காலை 9.30 மணிக்கு பிறகே கடைகள் மாற்றப்பட்டது. இதனால் உழவர் சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் காய்கறிகளை உடனடியாக வாங்கி செல்ல முடியாமல் காத்திருந்தனர்.

மேலும் செய்திகள்