அதிக பயணிகளை ஏற்றி சென்ற 18 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி
அதிக பயணிகளை ஏற்றி சென்ற 18 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை போக்குவரத்து ஆணையாளர் தென்காசி ஜவஹர் உத்தரவின்படி, ஈரோடு துணை போக்குவரத்து ஆணையாளர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மண்டலத்தில் உள்ள நாமக்கல் மற்றும் ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தலைமையில், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற 18 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அபராத தொகையாக ரூ.43 ஆயிரத்து 500 வசூல் செய்யப்பட்டது. வரி செலுத்தாத ஒரு ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த ஆம்னி பஸ் உரிமையாளருக்கு ரூ.72 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதேபோல் அதிக பயணிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக ஷேர் ஆட்டோ, சரக்கு ஆட்டோ, சுற்றுலா வேன், லாரி உள்பட 163 இதர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.76 ஆயிரத்து 552 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.64 ஆயிரத்து 900 உடனடியாக வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘இதுபோன்ற வாகன சோதனை ஈரோடு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும். எனவே ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.