பள்ளிபாளையத்தில் கழிவுநீர் கால்வாயில் மூதாட்டி பிணம் கொலையா? போலீசார் விசாரணை
பள்ளிபாளையத்தில் கழிவுநீர் கால்வாயில் மூதாட்டி பிணம் கொலையா? போலீசார் விசாரணை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் கழிவுநீர் கால்வாயில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் ெகாலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி ராசம்மாள் (வயது 70). இவர்களுக்கு அச்சாரம் என்ற மகன் உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கருப்பண்ணன் இறந்து விட்டதால் ராசம்மாள மகனுடன் இல்லாமல் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மூதாட்டியை காணவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனால் மூதாட்டி எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் உடலில் ரத்தக்காயத்துடன் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து ராசாம்மாளின் மகன் அச்சாரம் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது மூதாட்டி ராசம்மாள் தான் என்று உறுதி செய்யப்பட்டது.
விசாரணை
இதுகுறித்து அச்சாரம் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மூதாட்டி ராசம்மாள் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. எனவே மூதாட்டியின் நகைக்காக யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=======