மேலும் 90 ஆக்சிஜன் படுக்கை வசதி
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மேலும் 90 படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.
சிவகங்கை,
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மேலும் 90 படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.
பாதிப்பு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் மேலும் 90 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக தினசரி ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 275 படுக்கைகள் கொண்ட வார்டுகள் நிரம்பிய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 40 படுக்கைகள் கொண்ட 4 வார்டுகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அந்த வார்டுகளும் முழுவதுமாக நோயாளிகளால் நிரம்பிய நிலையில் மீண்டும் தற்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 90 படுக்கைகள் கொண்ட வார்டுகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தயார்
இதில் படுக்கைகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில் தற்போது ஆக்சிஜன் குழாய்களை நிறுவும் பணிகளில் டெக்னீசியன்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த பணிகள் முடிந்து 90 படுக்கைகளை கொண்ட வார்டுகளும் செயல்பாட்டிற்கு வரும் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.