சேலத்தில் கார் திருடிய வாலிபர் சிக்கினார்

சேலத்தில் கார் திருடிய வாலிபர் சிக்கினார்

Update: 2021-05-09 22:19 GMT
சேலம்:
சேலத்தில் கார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சோப்பு கம்பெனி 
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துகுமாரராஜா. இவர் சேலத்தில் சோப்பு கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது காரின் டயரை மாற்றுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குச்சாவடியில் உள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு சென்றார். தொடர்ந்து டயரை மாற்றிய பின்னர், காரை கடை முன்பு நிறுத்தி விட்டு டயர் மாற்றியதற்கான பணத்தை கட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று அவரது காரை திருடிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தலைமறைவாகி விட்டார். இது குறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடி சென்றவரை தேடி வந்தனர்.
கார் பறிமுதல்
இந்த நிலையில் போலீசார் நேற்று சேலம் புது ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, அவர் சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 23) என்பதும், முத்துகுமாரராஜாவின் காரை திருடி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்