சலவைத்தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை- ரூ.50 ஆயிரம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே பட்டப்பகலில் சலவைத்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுநிலா மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 40). சலவைத்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது சலவை நிலையத்திற்கு வேலைக்கு சென்றார்.
மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த சுமார் 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து வேலு, கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.