புதுக்கோட்டையில் கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுக்கோட்டையில் கோடை மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை:
கோடை மழை
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது லேசாக மழை பெய்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில் பகல் 11.45 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சிறிது நேரம் இடைவிடாமல் பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து நின்றது. திடீர் மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த கோடை மழையினால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடையில் விவசாயம் மேற்கொள்ள இந்த மழை சிறிது கைகொடுக்கும் என விவசாயிகள் கூறினர். மழை நின்ற பிறகு மீண்டும் வெயில் லேசாக அடித்தது.
ஆலங்குடி
ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அக்னி நட்சத்திர வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று கன மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ந்த காற்று வீசியது. மேலும் உழவர்கள் புன்செய் நிலங்களை உழவு செய்ய வசதியாக உள்ளது. வெண்டை, கத்தரி போன்ற பயிர்களுக்கு ஒரு வாரத்திற்கு தண்ணீர் தேவையை குறைத்துள்ளது. மாரியம்மன் பொங்கலன்று மழை பெய்தது மாரியம்மன் செயல் என்று மக்கள் கூறினார்கள்.
திருவரங்குளம்
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணியளவில் திருவரங்குளம், மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, கைக்குறிச்சி, கேப்பரை, தோப்புக்கொல்லை, பூவரசகுடி, வம்பன் நாள் ரோடு, வேப்பங்குடி, காயாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.