மாவட்டத்தில் 5 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு கலன் கலெக்டர் உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு கலன் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

Update: 2021-05-09 17:35 GMT
புதுக்கோட்டை:
படுக்கை வசதிகள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு நிலவரத்தை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டார். மேலும் சிறப்பு சிகிச்சை மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,074 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 655 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், மீதமுள்ளவர்கள் வீட்டு தனிமையிலும் உள்ளனர். 88 பேர் வெளிமாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில 2,300 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. இதில் ஆயிரம் படுக்கைகள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் படுக்கை வசதிகள் இரட்டிப்பு ஆக்கப்படும்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
அரசு மருத்துவக்கல்லூரியில் 12 கிலோ லிட்டர் ஆக்சிஜன் சேமிக்கக்கூடிய 2 டேங்குகள் உள்ளன. இதில் தினமும் தஞ்சாவூர் வல்லத்தில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு கூடத்தில் இருந்து தினமும் 6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் லாரியில் கொண்டு வரப்பட்டு நிரப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிக்கு தினமும் 3.5 முதல் 4 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதுப்போக ஆக்சிஜன் சிலிண்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான இருப்பு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் குறித்து அனைத்து மருத்துவமனைகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ சிகிச்சை மையம் அரசு மகளிர் கல்லூரியில் இன்னும் 2 நாட்களில் தொடங்கப்படும்.
ஆக்சிஜன் தயாரிப்பு கலன்
அரசு மருத்துவக்கல்லூரியில் 180 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் 5 மருத்துவமனைகளில் நிமிடத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க கூடிய கலன் அமைக்கப்படும். அந்தந்த அரசு மருத்துவமனைகளில் வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று (அதாவது நேற்று) முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவடையும். மேலும் அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக ஒரு பிளாண்ட் அமைக்கப்படும். சிப்காட்டில் 2 தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு பிளாண்ட் இயங்கி வருகிறது. ஏற்கனவே இயங்கி வந்த 5 பிளாண்ட் மூடியிருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களுடன் பேசி மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது டீன் பூவதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை, அறந்தாங்கி, இலுப்பூர், விராலிமலை, வலையப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு கலன் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்