கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்தார்.

Update: 2021-05-09 16:59 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான (கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை) கே.கோபால் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
பொதுமக்களின் அன்றாட வாழ்வு மற்றும் பொருளாதார சூழ்நிலை பாதிக்கப்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிப்பதுடன் கிருமி நாசினி கொண்டு தங்களது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
படுக்கை வசதி
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை மையங்கள், ஆக்ஸிஜன் அளவுகளை அதிகப்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினையும் வழங்கி, திருப்பூர் மாவட்டத்தில் நோய் தொற்றை குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருப்பூர் வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட சோளிபாளையம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம், அதே பகுதியில் செயல்பட்ட ரேஷன் கடையில் கொரோனா பரவல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், கல்லூரி சாலை சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா பரிசோதனை மையம், குமரன் மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினையும் கண்காணிப்பு அதிகாரி மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள்
முன்னதாக அரசு முதன்மை செயலாளர் கோபால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும், கடந்த முறையை காட்டிலும் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவரும் முககவசம் அணிந்து வெளியே சென்று வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
மேலும், பாதிப்பு அதிகமாகும்பட்சத்தில் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 782 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இருப்பினும் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 169 ஐ.சி.யு. படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 109 வெண்டிலேட்டர் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் திருப்பூர் பனியன் நிறுவனங்கள் செயல்படுவது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்