ரெம்டெசிவிர் மருந்து கேட்ட 63 பேருக்கு டோக்கன்

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். நேற்று மருந்து விற்பனை இல்லை என்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

Update: 2021-05-09 15:00 GMT

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். நேற்று மருந்து விற்பனை இல்லை என்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

மருந்து விற்பனை தொடக்கம்

  கொரோனா தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் உயிர்காக்க ரெம்டெசிவிர் மருந்து வழங்கப் படுகிறது. 

கோவை மருத்துவ கல்லூரியில் இந்த மருந்து விற்பனை மையம் தொடங்கப்பட்டது. அன்றைய தினமே 500 ரெம்டெசிவிர் பாட்டில்களும் விற்பனையாகி தீர்ந்தது.

  இதனிடையே கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்ட தகவல் அறிந்த கோவையை சேர்ந்தவர்கள் மட் டுமின்றி திருப்பூர், நீலகிரியை சேர்ந்தவர்களும் நேற்று கோவை மருத்துவ கல்லூரியில் மருந்து வாங்குவதற்காக குவிந்தனர்.

டோக்கன் வழங்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இல்லை என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் நாங்கள் நீண்ட தூரத்தில் இருந்து வந்து உள்ளோம். 

எங்களுக்கு மருந்து கொடுங்கள் அல்லது டோக்கன் வழங்குங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவர்களுக்கு டோக்கன் வழங்கினர். 

இதனை சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

  இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் நிர்மலா கூறியதாவது:-

முன்னுரிமை அடிப்படை

  கோவைக்கு முதல்நாளில் 500 ரெம்டெசிவிர் பாட்டில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விற்பனை தொடங்கிய முதல் நாளே அனைத்து பாட்டில்களும் விற்பனையாகின. 

குறைந்தது 500 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் தருவதாக மருத்துவ கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.   காலை 10 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்படும். டோக்கன் வழங்கப்பட்ட 63 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் மருந்து வழங்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்