பழனி அருகே தோட்டத்துக்குள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
பழனி அருகே தோட்டத்துக்குள் புகுந்து மாமரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின.
பழனி :
பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பைபட்டி கிராமம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த துரைச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 6 காட்டுயானைகள் புகுந்து, அங்குள்ள 13 மாமரங்களின் கிளைகளை சேதப்படுத்தின. இந்தநிலையில் காலையில் தோட்டத்துக்கு சென்ற துரைச்சாமி மாமரக்கிளைகள் முறிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி ஒட்டன்சத்திரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் சேதப்படுத்தியதை பார்வையிட்டனர்.
இதுகுறித்து விவசாயி துரைச்சாமி கூறும்போது, எங்கள் பகுதியில் கோடைகாலத்தில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகம் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு எனது தோட்டத்தில் காட்டுயானைகள் புகுந்து மாமரங்கள், கரும்பு பயிர்களை சேதப்படுத்தி சென்றது. அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.