இருவேறு இடங்களில் ரூ.30 லட்சம் போதைப்பொருளுடன் 2 பேர் சிக்கினர்

மும்பையில் இருவேறு இடங்களில் ரூ.30 லட்சம் போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-09 10:46 GMT
மும்பை,

மும்பை காந்திவிலி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவத்தன்று கோரேகாவ் மேம்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக அங்கும், இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

எனவே போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ.22 லட்சம் மதிப்பிலான 36 கிராம் கொகைகன், 114 கிராம் எம்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சாகித் குலாம் கான் (வயது20) என்பதும், நைஜீரியர் ஒருவர் அவரிடம் போதைப்பொருட்களை கொடுத்ததும் தெரியவந்தது.

இதேபோல ஒர்லி பகுதிக்கு ஒருவர் அதிகளவு கஞ்சாவுடன் வர இருப்பதாக ஆசாத் மைதானம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று ஒர்லி பால்பண்ணை ஊழியர்கள் காலனி அருகில் சிவகுமார் சங்கர் பாசையா (வயது40) என்பவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த பாலீதின் பையில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார் சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்