குமாரபாளையத்தில் சரக்கு ஆட்டோவில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது
குமாரபாளையத்தில் சரக்கு ஆட்டோவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்,
தமிழகத்தில் கொரோனா 2--வது அலை பரவலை தடுக்க அரசு நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த நாட்களில் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைப்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் உழவர் சந்தை அருகே கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கைது
அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உழவர் சந்தை அருகே நின்ற சரக்கு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் 35 பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் பெட்டியில் சோதனை நடத்தியதில் 1,680 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதையடுத்து போலீசார் அனைத்து மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், புளியம்பட்டியை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.