சேலம் மாவட்டத்தில் புதிதாக 550 பேருக்கு கொரோனா பாதிப்பு 2 பெண்கள் உள்பட 10 பேர் பலி
புதிதாக 550 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு 2 பெண்கள் உள்பட 10 பேர் இறந்தனர்.
550 பேருக்கு பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் 648 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதிதாக 550 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 308 பேர், சங்ககிரியில் 28 பேர், ஓமலூரில் 26 பேர், அயோத்தியாப்பட்டணம், வீரபாண்டியில் தலா 23 பேர் உள்பட 550 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 பேர் பலி
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த 774 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 543 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 8 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 10 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 6 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 594 ஆக அதிகரித்துள்ளது.