அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம்: ‘‘மு.க.ஸ்டாலினின் திட்டம் பாராட்டுக்குரியது’’ சேலம் பெண்கள் வரவேற்பு
‘‘மு.க.ஸ்டாலினின் திட்டம் பாராட்டுக்குரியது’’
சேலம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்யும் திட்டம் பாராட்டுக்குரியது என்று சேலம் மாவட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பஸ்சில் இலவச பயணம்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதவி ஏற்றவுடன் கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, சாதாரண கட்டணம் கொண்ட அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.
குறிப்பாக அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புரட்சிகரமான திட்டம்
சேலத்தை சேர்ந்த சமூக சேவகி தேவிகா:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் நாளிலேயே அரசு டவுன் பஸ்களில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். இது வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பெண்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம்.
இந்த திட்டத்தின் மூலம் அன்றாட வேலை மற்றும் பல்வேறு தொழிலுக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வரை மிச்சமாகும். தங்களது பெற்றோர் அல்லது சகோதரர்களிடம் தான் பஸ்சுக்கு பணம் வாங்கி செல்ல வேண்டிய சூழல் பெண்களுக்கு இருந்தது. இனிமேல் அப்படி இல்லை. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு இதனை புரட்சிகரமான திட்டமாக கருதுகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான நிர்வாக திறமையால் பெண்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அறிவிப்பார்.
ரூ.1,500 வரை சேமிக்க முடியும்
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி மாதேஸ்வரி:-
கட்டுமான வேலை, சந்தைக்கு செல்லும் பெண் வியாபாரிகள், வயது முதிர்ந்தவர்கள் என அனைத்து பெண்களும் டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கக்கூடியது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் வாக்குறுதியை பதவி ஏற்ற முதல் நாளிலேயே அவர் நிறைவேற்றியுள்ளார். இந்த திட்டத்தால் தினமும் பஸ்சில் ஏறி பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சேமிக்க முடியும். விலைவாசி ஒருபுறம் உயர்ந்து வந்தாலும், பெண்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை வரவேற்கிறேன்.
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த அபிராமி:-
நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறேன். நான் தினமும் வேலைக்கு சென்று வர ரூ.20 செலவு ஆகும். மாதத்திற்கு மொத்தமாக ரூ.500 வரை செலவு ஆகும். என்னை போன்ற நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய தொகையாகும்.
பஸ் பயண கட்டணத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவசமாக அறிவித்துள்ளதால் அந்த பணம் எனக்கு மீதம் ஆகும் என்பதால் குடும்ப சுமையும் குறையும். மேலும் இந்த பணம் குடும்ப செலவிற்கு பெரும் உதவியாக இருக்கும். இலவச பஸ் பயண வசதியை செய்து கொடுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வியந்து போனேன்
சேலம் மணக்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஏஞ்சல்:-
பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற தமிழக அரசின் திட்டத்தை அறிந்து வியந்து போனேன். இது உண்மையிலேயே வரவேற்புக்குரிய திட்டம். இதனால் கைச்செலவுக்கு கூட காசில்லாமல் தவிக்கும் பெண் கூலித்தொழிலாளிகள் பயன்பெறுவார்கள். காசில்லாவிட்டாலும் அரசு பஸ்சில் பயணம் செய்யலாம்.
இதற்கு முன்பு இதுபோன்ற சலுகைகள் இல்லை. இதனால் பெண்களின் பொருளாதாரம் நிச்சயம் மேம்படும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அதேபோல், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பிறப்பிக்க வேண்டும்.