சேலம் கோட்டத்தில் 837 டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம்
837 டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம்
\சேலம்:
சேலம் கோட்டத்தில் 837 டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர்.
5 கோப்புகளில் கையெழுத்து
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்தல், கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் வழங்குதல், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்தல் உள்பட 5 கோப்புகளில் முதலாவதாக அவர் கையெழுத்திட்டார்.
பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் பெண்கள் அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்தனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 210 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் மகிழ்ச்சி
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், ஜங்சன், ஏற்காடு அடிவாரம், தாரமங்கலம், ஓமலூர், வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், மல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர். கட்டணம் இல்லாமல் பயணம் செய்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன் மூலம் மாதந்தோறும் ரூ.500 வரை மிச்சமாக வாய்ப்புள்ளது என்று பெண்கள் தெரிவித்தனர். மேலும் அரசு டவுன் பஸ்களில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தது. சேலம் போக்குவரத்து கழக கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 837 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்திலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
..................