அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம்: ‘எங்களுக்கு காசு மிச்சமாகிறது’ கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சி
அரசு டவுன் பஸ்சில் இலவசமாக பயணம் செய்வதால் எங்களுக்கு காசு மிச்சமாகிறது என கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு,
அரசு டவுன் பஸ்சில் இலவசமாக பயணம் செய்வதால் எங்களுக்கு காசு மிச்சமாகிறது என கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இலவச பயணம்
தமிழ்நாட்டில் உள்ள டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். அவர் பதவி ஏற்ற உடன் கையொப்பமிட்ட 5 முக்கிய கோப்புகளில் இந்த உத்தரவும் ஒன்றாக இருந்தது. இந்த உத்தரவு நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் கட்டணமில்லாத பஸ்களை அடையாளம் காணும் வகையில் மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து நம்பியூர், கோபி, பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, அத்தாணி, பண்ணாரி ஆகிய பகுதிகளுக்கு சென்ற அரசு டவுன் பஸ்களில் ஏராளமான பெண்கள் இலவசமாக சென்றனர்.
இதுகுறித்து பெண் பயணி ஒருவர் கூறுகையில், ‘தினமும் ரூ.15 அல்லது ரூ.20 செலவு செய்து பஸ்சில் பயணம் செய்து கூலி வேலைக்கு சென்று வருகிறோம். பஸ்சில் இலவசமாக பயணம் செய்வதால் இந்த காசு எங்களுக்கு அப்படியே மிச்சமாகிறது. இது எங்களுடைய குடும்ப செலவுக்கு உதவும். அதுமட்டுமின்றி வருகிற 10-ந் தேதி (அதாவது நாளை) முதல் 24-ந் தேதி வரை டாஸ்மாக் கடை மூடப்படும் என்ற அறிவிப்பும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
கோபி- அந்தியூர்
கோபி பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்ற டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதில் பயணம் செய்த கோபி நால்ரோட்டை சேர்ந்த சுமித்ரா (23) என்ற பெண் கூறுகையில், ‘நான் கூலி வேலை செய்து வருகிறேன். அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தினமும் மிச்சமாகும் பணத்தை கொண்டு குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் வாங்க உதவியாக இருக்கும். மேலும் தினமும் ரூ.20 முதல் ரூ.50 வரை எங்களால் சேமிக்க முடியும். இந்த சேமிப்பானது குடும்பத்தின் மற்ற தேவைகளுக்கு உதவியாக இருக்கும்,’ என்றார்.
இதேபோல் அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி, அத்தாணி, கோபி, பவானி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளுக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏராளமான பெண்கள் பயணம் செய்தனர்.
வழக்கத்தை விட அந்தியூரில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்ற அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண் பயணி ஒருவர் கூறுகையில், ‘வேலைக்கு செல்வதற்காக நாங்கள் பஸ்சுக்காக தினமும் ரூ.25 வரை செலவு செய்கிறோம். இலவசமாக பயணம் செய்வதால் இந்த பணம் மிச்சமாகிறது,’ என்றார்.