வேலாயுதம்பாளையத்தில் பிரியாணி சமையல் கூடத்தில் இருந்த கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சிகளை பறிமுதல்

வேலாயுதம்பாளையத்தில் பிரியாணி சமையல் கூடத்தில் இருந்த கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-05-01 18:47 GMT
நொய்யல்
பிரியாணி கடை
கரூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவர் வேலாயுதம்பாளையத்தில் தங்கி அங்குள்ள உழவர் சந்தை எதிரே கரூர் பிரியாணி சென்டர் என்ற பெயரில் சொந்தமாக பிரியாணி கடை நடத்தி வருகிறார். 
இந்த கடைக்கு தேவையான பிரியாணி அதே பகுதியான முல்லைநகரில் பாண்டியன் (48) என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள சமையல் கூடத்தில் தினமும் தயாரிக்கப்பட்டு, கடைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அங்கு சிக்கன் வறுவல், சில்லி சிக்கன் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகிறது. 
அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில் கோழி இறைச்சிகளை குளிர்சாதனப் பெட்டிக்குள் நீண்ட நாட்களாக வைத்திருந்து பிரியாணி தயாரிக்கப்படுவதாகவும், அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில், நேற்று கரூர் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன், பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் சுகாதாரப்பணியாளர்கள், போலீசார் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட பிரியாணி தயார் செய்யும் சமையல் கூடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர். 
100 கிலோ இறைச்சிகள் பறிமுதல்
அப்போது சமையல் கூடத்திற்குள் சுகாதாரமற்ற முறையில் கெட்டுப்போய் இருந்த இறைச்சிகளை வைத்து பிரியாணி தயார் செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு குளிர்சாதன பெட்டிக்குள் 10 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ இறைச்சிகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது. இதையடுத்து அந்த இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தும், குளோரின் பவுடர் போட்டு பிரியாணி செய்யும் சமையல் கூடத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 
அதேபோல் அங்கு காரின் டிக்கியில் தோல் உரித்து வைக்கப்பட்டிருந்த முழுக்கோழிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பிரியாணி விற்பனை செய்யும் கடைக்கு சென்று கடையை பூட்ட உத்தரவிட்டனர். 
பரபரப்பு
மேலும், பிரியாணி விற்பனை செய்யும் கடைக்குள் இருந்த பழைய எண்ணெய் வகைகளை அதிகாரிகள் தரையில் கவிழ்த்து விட்டனர். பின்னர் மறு உத்தரவு வரும்வரை பிரியாணி தயார் செய்யவோ? விற்பனையோ? செய்யக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்