பரமத்திவேலூர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கிய 9 பேர் கைது

பரமத்திவேலூர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-30 18:06 GMT
பரமத்திவேலூர்:
தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாகவும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பரமத்திவேலூர் பகுதியில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனைக்கு வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பரமத்திவேலூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பொத்தனூரை சேர்ந்த ரவி (வயது 40), பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (28), கோகுல் (22), பாலப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (27), பொன்மலர்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (38), எஸ்.கே.மேட்டூரை சேர்ந்த மூர்த்தி (39), மோகன்குமார் (32), பாண்டமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன் (60) மற்றும் வேலூர் தெற்கு தெருவை சேர்ந்த நாச்சிமுத்து (45) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 223 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்