வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 3 பேர் கைது
திண்டிவனம் பகுதியில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரன். கடந்த 18-ந்தேதி நள்ளிரவில் இவரது வீட்டு கதவை உடைத்து முகமூடி அணிந்திருந்த 4 பேர் உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள், பிலவேந்திரனை தாக்கி துப்பாக்கி முனையில் மிரட்டினர். மேலும் அவரது மகன் அருண்குமார் (வயது 31) கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர்.
இதேபோல் ஜக்காம் பேட்டையை சேர்ந்த ஆசிரியரான குமார்(24) வீட்டில் ஒரு மோட்டார் சைக்கிளையும், ஓய்வுபெற்ற ஆசிரியர் வரதராஜன் (70) என்பவரை மிரட்டி அங்கிருந்த எல்.இ.டி. டி.வி.யையும் அவர்கள் தூக்கிச்சென்றனர். செல்வம் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2 ஜோடி கொலுசு, கம்மல், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றையும், கூட்டேரிப்பட்டை சேர்ந்த பாபு(29) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்றனர்.
மேலும் கன்னிகாபுரத்தை சேர்ந்த நெஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரரான விசு என்கிற ஞானசேகர் என்பவரது குடும்பத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டில் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது ஞானசேகர் குடும்பத்தினர் கூச்சலிட்டதால், அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 கொள்ளையர்களும், தாங்கள் வந்திருந்த காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஒரே நாள் இரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படை அமைப்பு
இந்த கொள்ளை கும்பலை பிடிக்க விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை கன்னிகாபுரம் கிராமத்தில் விஜயன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 3 பேர் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில், திருவள்ளூர் அருகே உள்ள மாகரல் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்கிற டேனி, சென்னை எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் அசோக், ஆந்திர மாநிலம் நல்லூர் தடாமண்டலம் காருர் கிராமத்தை சேர்ந்த கோபி மகன் கார்த்திக் ஆகியோர் என்பதும், திண்டிவனம் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டதும், அவ்வாறு கொள்ளையடித்த நகை, கொலுசு, கத்தி ஆகியவற்றையும், துப்பாக்கியையும் மின்மோட்டார் கொட்டகை அருகில் மறைத்து வைத்திருந்ததாகவும், அதை எடுக்க வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, 2 பவுன் நகை, கொலுசு, கத்தி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அது பற்றிய விவரம் வருமாறு:-
டெல்லியில் துப்பாக்கி...
இந்த வழக்கில் கைதாகி உள்ள யுவராஜிக்கும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பரத் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. பரத் துப்பாக்கி வைத்துள்ளார். அதேபோல் துப்பாக்கி வாங்குவதற்காக யுவராஜ், தனது நண்பர்களான அசோக், சங்கர் ஆகியோருடன் ரெயிலில் கடந்த மாதம் டெல்லிக்கு சென்றார்.
ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது இந்தூர் பூரியை சேர்ந்த சுல்தானுடன் யுவராஜிக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் அவரிடம் துப்பாக்கியை வாங்கினார்.
கார் கடத்தல்
பின்னர் அங்கிருந்து லாரியில் நாக்பூர் டோல் பிளாசாவிற்கு 3 பேரும் வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் லிப்ட் கேட்டு ஏறினர். வரும் வழியில் காரின் உரிமையாளர் அஜய், அவரது நண்பர் வம்சி ஆகியோருடன் புகை பிடிப்பது சம்பந்தமாக யுவராஜிக்கு தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து துப்பாக்கியை காண்பித்து அஜயையும், அவரது நண்பரையும் மிரட்டி காரில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் 3 பேரும் அந்த காரை கடத்திக்கொண்டு தமிழகத்திற்கு வந்தனர். பின்னர் மற்றொரு நண்பரான கார்த்திக்கும், அவர்களுடன் காரில் ஏறிக்கொண்டார். திருச்சி மார்க்கமாக வந்தபோது, சாலையோரத்தில் இருந்த ஒரு பஞ்சர் கடையில் காரை நிறுத்தி டயரில் காற்று சரியாக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்த இரும்பு கம்பிகள், கத்தி உள்ளிட்டவற்றை திருடி, காரில் போட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து காரில் இருந்த நம்பர் பிளேட்டை கழற்றிவிட்டு திண்டிவனம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
கைதான 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. கார் கடத்தல் சம்பந்தமாக மராட்டிய மாநிலம் நாக்பூர் சிட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அந்த போலீஸ் நிலையத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.