வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி, மே.1-
திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து மேல்மட்ட கால்வாய் பிரிவு 5-ல் 2 கிளை வாய்க்கால்கள் உள்ளது. இவ்விரு கிளை வாய்க்கால்கள் மூலமாக குடிகாடு, தொளார், புத்தேரி, மேல் நிமிலி, கீழ் நிமிலி, அருகேரி, அகரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
இதில் நெற்பயிர்கள் கதிர்வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், வெலிங்டன் ஏரி வாய்க்காலில் கோழியூர் 5 கண் மதகில் ஒன்றில் மட்டும் தண்ணீரை பொதுப்பணித்துறை யினர் திறந்து விட்டுள்ளனர்.
இதனால் பிரிவு 5-ல் உள்ள 2- கிளை வாய்க்காலில் குறைந்த அளவிலே தண்ணீர் செல்வதால், பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மேல்மட்ட கால்வாயில் நின்று தண்ணீரை முழுமையாக திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.