கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி 510 பேருக்கு தொற்று
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். நேற்று ஒரே நாளில் 510 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். நேற்று ஒரே நாளில் 510 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாலிபர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். உடல் நலக்குறைவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 24-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 28-ந் தேதி அவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
510 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 510 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 269 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 ஆயிரத்து 244 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 145 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.