வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம்: மனைவி கழுத்தை அறுத்து கொலை கோவில் பூசாரி வெறிச்செயல்

வாலிபருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பூசாரி, மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

Update: 2021-04-30 15:54 GMT
வேப்பனப்பள்ளி:
வாலிபருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பூசாரி, மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கள்ளத்தொடர்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் பிராமணர் தெருவை சேர்ந்தவர் சென்னபசப்பா (வயது 44). இவர் பாகலூர் பைரவர் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி கவுரம்மா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
இந்த நிலையில், சென்னபசப்பாவுக்கு உதவியாளராக கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சாகர் கிராமத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா (23) என்பவர் கோவிலில் பணியில் சேர்ந்தார். இவர் சென்னபசப்பா வீட்டில் தங்கி இருந்தார். அப்போது கவுரம்மாவிற்கும், மிருத்தியன் ஜெயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 
கழுத்தை அறுத்து கொலை
இவர்களின் கள்ளக்காதல் குறித்து தெரியவந்ததும் சென்னபசப்பா 2 பேரையும் கண்டித்தார். இதைத்தொடர்ந்து மிருத்தியன் ஜெயா சென்னபசப்பா வீட்டில் இருந்து வெளியேறினார். நேற்று முன்தினம் மாலை சென்னபசப்பா தனது மனைவி கவுரம்மாவை வேப்பனப்பள்ளியை அடுத்த கே.என்.போடூர் கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றார். 
அப்போது கோவிலின் பின்புறம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சென்னபசப்பா, கவுரம்மாவை அருகில் கிடந்த கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத சென்னபசப்பா துப்பட்டாவால் கவுரம்மாவின் கழுத்தை நெரித்தார். தொடர்ந்து அவர் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தும், தலையில் குத்தியும் கொலை செய்தார்.
போலீசில் சரண்
பின்னர் சென்னபசப்பா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் தான் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். உடனே டவுன் போலீசார் இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கவுரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் ஓசூர் டவுன் போலீஸ் நிலையம் சென்று சென்னபசப்பாவை கைது செய்து வேப்பனப்பள்ளி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 
பரபரப்பு
கள்ளத்தொடர்பை மனைவி கைவிட மறுத்ததால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சென்னபசப்பா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் வேப்பனப்பள்ளி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்